உன்னோடு போனதே அண்ணா...!

செப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள். இதையொட்டிய சிறப்பு 25 பகிர்வு...
* அப்பாவியாகத் தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன்!
* முதலமைச்சராக இருந்து அவர் இறந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய், மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் அவரது கணக்கில் இருந்தன!
* புற்றுநோய் பாதிப்பில் இருந்தபோது, சென்னை மருத்துவமனையில் இருந்து வேலூர் சி.எம்.சி-க்கு அவரைக் கொண்டுசெல்லும்போது தடுத்தார். ''நாமே அரசாங்க மருத்துவமனையை மதிக்காததுபோல ஆகிவிடும்'' என்றார்!
* நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது, சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழித் திட்டத்தை சட்டமாக்கியது... இவை மூன்றும் அண்ணாவின் சாதனைகள்!
* எதையும் தாங்கும் இதயம் வேண்டும்', 'கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு', 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்', 'கடமை-கண்ணியம் -கட்டுப்பாடு', 'எங்கிருந்தாலும் வாழ்க', 'மறப்போம் மன்னிப்போம்', 'வாழ்க வசவாளர்கள்', 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு', 'சட்டம் ஒரு இருட்டறை', 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' ஆகிய பிரபலமான வாசகங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை!

'அ'... மொழிக்கு முதல் எழுத்து. அண்ணா... பல கட்சிகளுக்கு முன்னெழுத்து. இன்றைய அரசியல்வாதிகள் பலருக்கும் அவர்தான் தலையெழுத்து!
இன்றும் அந்த மனிதரைக் கொண்டாடுவதற்கு, அவரது பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மட்டும்தான் காரணமா? இல்லை, அத்துடன் அவரிடம் இருந்த அரசியல் நாகரிகமும் பண்பாடும்தான் காரணம். தனக்குக் கீழே இருந்த தம்பிகளை மதித்தார். அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர்களை அரவணைத்தார். குடும்பம் வேறு, கட்சி வேறு என்று நினைத்தார். அவர் வளர்த்த நாகரிகம் இன்றைய அரசியல்வாதிகளால் பின்பற்றப்பட்டால், சமூகமே மேம்படும்!

Comments

Popular Posts